ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் சாதகமாகவே அமையும்: இலங்கை நம்பிக்கை

ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மெசிடோனியா, மலாவி மற்றும் மொண்டீனீக்ரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து  கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

‘மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுபாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது’.’ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில்  கொண்டு வரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk) வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும்’ என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.  பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளன.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.