இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதிய யோசனை முன்வைக்க திட்டம்!

இலங்கை தொடர்பான பிரித்தானியா தலைமையிலான முக்கிய குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் புதிய யோசனையை முன்மொழியவுள்ளது. கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த யோசனையை முன்மொழியவுள்ளன.

இந்த யோசனை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விடவும் மாறுபட்ட வகையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிராகரித்துள்ள போதிலும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 51ன் கீழ் 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் 46ன் கீழ் 1 தீர்மானத்தையும், 51ன் கீழ் 1 தீர்மானத்தையும் இலங்கை நிராகரித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அதேநேரம், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (volker turk) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் தரப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்தநிலையில் அவரும் தமது அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. இது இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதற்கான சாட்சியென தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.

இந்த பின்னணியில் இலங்கை தொடர்பான புதிய யோசனையை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.