அரசியலமைப்புப்பேரவையை புதிய அரசியலமைப்பு பலவீனப்படுத்தக்கூடாது – சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் அதேவேளை, அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப்பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிர்வாக தீர்ப்பு சபை ஆகிய கட்டமைப்புக்கள் பலவீனப்படுத்தப்படக்கூடாது என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இயங்கிவரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக பிரதமர் வெளியிட்டுள்ள கருத்தைப் பெரிதும் வரவேற்கிறோம். புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதாகவும், அதனூடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகவும் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின்போது அரசாங்கம் அளித்த வாக்குறுதியின்மீது நம்பிக்கை வைத்தே இக்கருத்தை வெளியிடுகிறோம்.

அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்காமல் அரசாங்கம் அதனை நிறைவேற்றும் என ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்திருப்பதுடன் பிரதமரின் கருத்தை அதற்கான ஆரம்பமாகவே நாம் கருதுகிறோம்.

அதற்கமைய 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இயங்கிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளைத் திரட்டும் குழுவினால் நாடளாவிய ரீதியில் சகல பகுதிகளையும் உள்வாங்கி பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

அப்போது அந்நடவடிக்கைக்கு தலைமைத்துவம் வழங்கியவர் இப்போது தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பின்களில் ஒருவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க ஆவார். எனவே அந்த யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் ஊடாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்காக செலவிடப்படக்கூடிய நேரம் மற்றும் நிதியின் அளவைக் குறைத்துக்கொள்ளவும், ஒட்டுமொத்த நாட்டுமக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை வென்றெடுக்கவும் முடியும்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதோ அல்லது அதற்கு முன்னதாகக் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தின்போதோ அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப்பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிர்வாக தீர்ப்பு சபை ஆகிய கட்டமைப்புக்களை பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கக்கூடாது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவர் தலைமைத்துவம் வழங்கும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையையும், இவ்விடயத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டையும் பெரிதும் வரவேற்கிறோம்.

எனவே அத்திருத்தத்தின் ஊடாக கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கலாசாரத்தை எதிர்வருங்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் எவ்வகையிலும் பின்தள்ளுவதற்கு இடமளிக்கக்கூடாது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.