மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன்முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்ல தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு உச்சநீதிமன்றத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தெரிவித்துள்ளார்.
கோட்டாபாய ராஜபக்ச வாக்குமூலம் வழங்க தயாராகயிருக்கின்றார் என தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சிக்காரர் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய எந்த பகுதியிலும் சாட்சியமளிக்க தயார் என ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
காணாமல்போன செயற்பாட்டாளர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை கோட்டாபயவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தரணி நுவான் போபகே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
ஆட்கொணர்வு மனு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச ஆஜராகவேண்டும் என யாழ்ப்பாண நீதிமன்றம்2019 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை இரத்து செய்த முன்னைய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன.