தற்போது, இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் வீதம் அதிகரித்து வருகின்றது.
அத்துடன், போதைப்பொருளினால் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
இந்தநிலையில், கொழும்பில் உள்ள பிரபல்யமான மகளிர் பாடசாலையொன்றில் பயிலும் ஐந்து மாணவிகள் போதைப்பொருளை உட்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து மாணவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.9ஆம் தரத்தில் பயிலும் மாணவிகள் சிலர் போதைப்பொருளை உட்கொண்டதாக குறித்த பாடசாலையின் அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஐந்து மாணவிகளும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த ஐந்து பேரில் ஒருவரே போதைப்பொருளை வழங்கியதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆயிரத்து 80 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.