தமிழர்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது என்றும் அதனூடாக இனத்தின் அளவு குறைந்து செல்கிறது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது. வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983 கறுப்பு ஜூலையில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்த பல இயக்கங்களாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் துரதிஸ்டவசம் இந்த போராட்டம் 2009 இல் மௌனித்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழ் தரப்பின் பலவீனத்தால் தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றார்கள். ‘நாம் ஒரு போதும் ஒத்த கருத்துடன் நிற்கபோவதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்’ என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எல்லோருக்கும் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் சுயாட்சி அமைய வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.ஆனால் ஆயுத போராட்டத்தில் ஒரு சிறு கீறலை கூட சந்திக்காதவர்கள் இன்று மற்றவர்களை துரோகி என்றார்கள்.ஏமாற்று அரசியலை செய்கின்றார்கள். இது தமிழ் மக்களுக்கு எந்தவித்திலும் விமோசனத்தை ஏற்படுத்தி தரப்போவதில்லை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.