வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையில் அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது.
இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று (24) முற்பகல் 10 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
பேரணி மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்தபின், அங்கு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிறைவாழ்க்கை கண்காட்சியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள “விடுதலை விருட்சத்துக்கான ” விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றன.
இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகம் செய்யப்பட்டது.