அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கான சந்தையை திறக்கும் நாடுகளுக்கு மாத்திரமே வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை குறைப்பதற்கான முயற்சியில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ள அவர், ‘அதிக வரிகள் இல்லையென்றால்’ தங்களது வரியும் குறைக்கப்படும் என்ற வகையில் கருத்துரைத்துள்ளார்.
அவ்வாறில்லாமல் எந்த நாட்டுக்கும் அமெரிக்காவின் பூஜ்ஜிய வரியை பெறுவது சாத்தியமற்ற விடயமெனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அந்த அளவு 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த 30 சதவீத வரியை 19 சதவீதமாக குறைப்பது தொடர்பில் இலங்கை அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.