இந்தியாவில் பிறந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள பல இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் என்று தமிழகத்தின் குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல ஆணைக்குழு தகவல்களை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.
விண்ணப்பங்களை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில், குடியுரிமைச் சட்ட விதிகளின் கீழ் சுமார் 300 இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெறுவதற்கான தகைமையை கொண்டுள்ளமை தெரியவந்தது.
தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 57 ஆயிரத்து 500 பேரை உள்ளடக்கிய வகையில் குறித்த ஆணைக்குழு மதிப்பீட்டை நடத்தியதுடன் குடியுரிமை பெறுவதில் அவர்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தது.
இதனையடுத்து குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் 1987ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1964 மற்றும் 1974 ஒப்பந்தங்களின் கீழ், இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்களால் வழங்கப்பட்ட இந்திய-இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள இந்திய வம்சாவளி தமிழர்கள் சிலரும் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அதேவேளை, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவுச் செய்து அவர்களுக்கான ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.