செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையின் அமர்வின் போது தவிசாளர் தமது யோசனைகளை முன்மொழிந்தார். இதன்படி, செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்பு கூறல் செயல் திட்ட அதிகாரிகள், தொழில்நுட்ப ரீதியான உள்ளீட்டை வழங்கவும் கண்காணிப்பில் ஈடுபடவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் 46ன் கீழ் 1 தீர்மானத்திற்கு அமைய இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அதிகாரிகளுக்கு தடையற்ற வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.
புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றால் கோரப்படும் அனைத்து நிதிக் கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதுவரை வெளிவந்த தகவல்களின் பிரகாரம் அனைத்து புதைகுழிகளிலும் சர்வதேச கண்காணிப்புடனான அகழ்விற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் போன்ற யோசனைகள் தவிசாளரால் முன்வைக்கப்பட்டன.
இதனை சபை உறுப்பினர் கந்தன் பரஞ்சோதி வழிமொழிந்ததுடன் சபை உறுப்பினர்களால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.