மட்டக்களப்பில் தொடர் மழை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பல குடும்பங்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாவற்குடா கிழக்கின் பல வீதிகளும் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக மக்கள் பயணம் செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் பல்வேறு தேவைகளுக்காக செல்வோரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் நாவற்குடா கிழக்கு மெதடிஸ்த முன்பள்ளி கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.

பல வருடங்களாக இவ்வாறு மழைகாலங்களில் தமது பகுதிகள் நீரிழ் மூழ்கும் நிலையுள்ளபோதிலும் இதுவரையில் தமது பகுதிகளில் வடிகான்களை அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

நீண்டகாலமாக தமது பகுதிகள் இவ்வாறு மழை காலங்களில் பாதிக்கப்படும் நிலையிலும் எவரும் தமது நிலைமை தொடர்பில் கருத்தில் கொள்ளவில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Batti flood 2 மட்டக்களப்பில் தொடர் மழை மக்களின் இயல்பு நிலை பாதிப்புஇதேநேரம் நாவற்குடாவில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இந்த பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.இந்த பணிகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நீர் வழிந்தோடும் தோணா பகுதியிலேயே இந்த மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே இப்பகுதி நீரில் மூழ்குவதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

Batti flood 1 மட்டக்களப்பில் தொடர் மழை மக்களின் இயல்பு நிலை பாதிப்புஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் குறித்த பகுதியில் வடிகான்களை அமைப்பதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.