தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றன!

தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்றுபோகின்ற தன்மையும் காணப்படுகிறது என யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தின் 135ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ். கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம்  புதன்கிழமை (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது வரலாற்றுத் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத்துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும்போது மக்கள் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

யாழ். மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக்கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்றுப் பெறுமதி மிக்கவை. மிகப் பெறுமதியான பொக்கிஷமாக யாழ்ப்பாண கோட்டை காணப்படுகிறது.

ஆனால், எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாக உள்ளது. காலி கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்றவேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு வாழும் கோட்டையாக  யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில் கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள்.

மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது.