கறுப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும் இதுவரையிலும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்று இன்று (23) பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு முன்னர், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இதேபோன்ற ஒரு நாளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
42 ஆண்டுகள் கடந்தும் இந்த விடயத்தில் எவ்வித பொறுப்புக்கூறலும், நீதியும், விசாரணையும் இல்லாமல் இருக்கிறது.
இந்த வரலாற்றில் எந்த அரசாங்கம் வந்தாலும், இதுவரையிலும் நீதியான முறையில் அதற்கான மன்னிப்பையோ அல்லது பரிகாரத்தையோ தேட முற்படவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்தன விட்ட தவறை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விடுவாரானால், நாடு தான் விரும்பும் திசையில் பயணிக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.
அது சுயநிர்ணயத்துடன் கூடிய தமிழர்களுக்கான தீர்வை நோக்கியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க, இந்த நாட்டின் அரசாங்கமொன்று தமது படை பலத்தை பயன்படுத்தி கடுமையான வேதனையுடன், இன்று வரை தீர்க்க முடியாத பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நாளாக இன்றைய நாள் இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியாக இலங்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட நாளாகவும் இந்த நாள் உள்ளது. அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
திட்டமிட்ட வகையில் இலங்கையில் இனவாதத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் உந்துதலுடன் குறிப்பாக கொழும்பு உட்பட வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் திட்டமிடப்பட்டு வேட்டையாடப்பட்டனர் என்று தெரிவித்தார்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். சில சாதாரண சிங்கள மக்கள் தங்களின் நண்பர்களை பாதுகாப்பதற்காக தங்களால் முடிந்த அளவு தமிழ் மக்களை மறைத்து வைத்திருப்பதற்கும் உதவியிருந்தார்கள். தற்போதைய அரசாங்கம் தங்களை சகல சந்தர்ப்பங்களிலும் இனவாதிகள் இல்லை என்று கூறி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் வடக்கு கிழக்கு மக்கள் கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூரும் இன்றைய தினம் (23), அரசாங்கம் தெற்கில் இருந்து இளைஞர் குழுக்களை வடக்குக்கு அனுப்புகிறது.
அந்த நினைவு கூரலை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் சகோதரத்துவம் என்ற பெயரில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. ஜே.வி.பி அரசாங்கத்துக்கு இனவாதம் இல்லை என்றால், இன்றைய தினம் கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்திருக்க வேண்டும். இன்றைய தினத்தை சகலரும் நினைவு கூரும் தினமாக தற்போதைய அரசாங்கம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு மாறாக வரலாற்றை மறைக்கவும் மாற்றியமைக்கவும் தற்போதைய அரசாங்கம் முயல்கிறது.
இதுவரையிலும் உத்தியோகபூர்வ மன்னிப்பு ஏதும் கிடைக்காத நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.