கறுப்பு ஜூலை வாரம் இன்று ஆரம்பம்!

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகளாகின்றன. யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வன்முறைக்கான காரணம் உருவாக்கப்பட்டது.

இதன்படி, 1983 ஜூலை 24ஆம் திகதியன்று இரவு குறித்த படையினரின் சடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் கொழும்பு – பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த இன வன்முறையின் ஆரம்பம் பொதுவாக கறுப்பு ஜூலை என்று பதிவாகியுள்ளது. இந்த வன்முறை 1983 ஜூலை 30ஆம் திகதி வரை நீடித்தது. இந்த நாட்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
18 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டன. 5 ஆயிரம் வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன், 90 ஆயிரம் முதல் 1 இலட்சத்து 50ஆயிரம் தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்.

கறுப்பு ஜூலை வன்முறையின்போது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கைத்தீவை விட்டு புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கு இந்த வன்முறையே வித்திட்டது. அத்துடன், இந்த வன்முறையே தமிழர் போராட்டம் தீவிரமாவதற்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், இலங்கையின் இனப்பிரச்சினையையும் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது.