வட்டுக்கோட்டை காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிக் கோரியும் மூளாய் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்ததுடன் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன், மோதலுடன், தொடர்புடைய பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மதுபானசாலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்களது பகுதியைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மூளாய் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விடயத்தில் பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என்றும் இதனையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.