மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்ததாக கூறி, ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, ஜனாதிபதித்தேர்தல், பொதுத்தேர்தல், உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், மாகாணசபை தேர்தலும் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தநிலையில், சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கருத்து அரசியல் தரப்பில் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்
எனினும், சட்ட சிக்கல்கள் தடையாக உள்ள நிலையில் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக நிவர்த்திப்பதாக அரசாங்கமும் உறுதியளித்துள்ளது
இந்த சூழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறித்த கருத்தை வெளியிட்டிருப்பார் என்று, தாம் நம்பவில்லை என அந்த உயரதிகாரி குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் தாம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.