அன்று எம்மிடத்தே போசாக்கின்மை வறுமையால்தான் தலைதூக்கியிருந்தது. இன்று வசதி படைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உணவுப் பழக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் துரித உணவுகளால் இத்தகைய பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடைபவனி இன்று திங்கட்கிழமை (21) தெல்லிப்பழையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தங்கள் கடமைக்கு மேலதிகமாக சமூகத்துக்காக பணியாற்றுபவர்கள், கடமையை மாத்திரம் செய்பவர்கள், கடமையைக் கூட செய்யாதவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கின்றனர். இவர்களில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார், முதலாவது வகைக்குள் அடங்குவார். அவர் தனது கடமைக்கும் அப்பால் சென்று இந்தச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக சிந்தித்து புத்தாக்கமாகச் செயற்படுகின்றார். அவரைப் போன்று இந்தச் சமூகத்துக்கு இப்போது அவசிய தேவையாக உள்ள இவ்வாறான விடயங்களை ஏனையோரும் முன்னெடுக்கவேண்டும்.
தாய் – சேய் நலம், உணவும் போசாக்கும், பாடசாலை சுகாதாரம், சுற்றுச்சூழல் – தொழில்முறை சுகாதாரம், ஆன்மிக உள நல சுகாதாரம் ஆகிய 5 தலைப்புக்களின் கீழ் இந்தக் கண்காட்சி முன்னெடுக்கப்படுகிறது.