யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள “செம்மணிப்புதைகுழிகள் கிளறிய சிந்தனைகள்” என்னும் அறிக்கையில், மிதக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிபோல (Tip of the iceberg) தற்போது வெளிவந்துள்ள 65 புதை உடல சிதைவுப்பகுதிகளும் கிருசாந்தி பாலியல் வன்முறை, இனஅழிப்புக் கொலைஞர் சோமரட்ண ராஜபக்ச குறிப்பிட்ட 600 புதை உடலங்களின் சிதைவுகளில் சிலவெனக் கருதுவது மிகையாகாதெனக் குறிப்பிட்டுள்ளது.
அதே அறிக்கை, “அண்மையில் செம்மணிக்குச் சென்றிருந்த அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் வொல்கர் ரேக், அணையா விளக்கு நிகழ்விலும் மூன்று நாட்கள் கலந்து கொண்டு பார்வையிட்ட பின்னரும், அவரது கருத்துக்களில் அனைத்துலக விசாரணையை சுட்டாதிருப்பது கவலைக்குரியது” எனத் தெரிவித்துள்ளது. கூடவே, தமிழர் தாயகத்தில் நடைபெற்ற அனைத்து குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள் உட்பட அனைத்து யுத்தவெறியாட்டங்கள் வழியாக தாயகம் எங்கும் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்தும் அனைத்துலக விசாரணையின் அவசியத்தை அறிக்கை புள்ளிவிபரங்களுடன் எடுத்து விளக்கியுள்ளது.
3000 நாட்களுக்கு மேலாக தங்களது கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கான நீதிக்காகப் போராடுபவர்களில் 200 பேரளவில் போராட்டக் களத்திலேயே உயிரிழந்த நிலையிலும், இன்னமும் அவர்களுக்கான நீதி கிடையாத நிலையையும் அறிக்கை எடுத்துரைத்துள்ளது.
பலவிதமான வாக்குறுதிகளுடன் மாற்றத்தை ஏற்படுத்துவோமெனப் பதவிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் “பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை” என்ற கதையாகவே ஆட்சி செய்கின்றனர் என்பதையும் இவ்வறிக்கை கூட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய அறிக்கைகளை அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள் அனைத்துலக மக்கள் மயப்படுத்த வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
இவ்வாரத்தில் தாயகத்தில் இடம்பெற்ற செம்மணிக்கான நீதி கோரல் நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு தொகுப்பதன் மூலம், தாயகத்தில் மீளவும் மக்கள் விழிப்புணர்வும், கட்சி பேதங்களை மறந்து பொதுவிடயங்களில் ஒருமைப்பாட்டுடன் செயற்படும் மனநிலையும் வளரத் தொடங்குவதை இலக்கு வெளிப்படுத்த விரும்புகிறது.
கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் மேற்கொண்ட “செம்மணிச் சமூகப்படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்” கவனயீர்ப்பு நிகழ்வில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல், “தெற்கில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் படுகொலைகளுக்கே நீதி கோராத இன்றைய அரசாங்கம், எவ்வாறு தமிழர்களுக்கு நீதி கோரும்? எனவே, வடக்கு கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை அனைத்துலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற வேண்டுகோளை விடுத்தார்.
மேலும், கிழக்கில் ஊர்க்காவல் படையினர் என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து 1990-1991ம் ஆண்டுகளில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமை தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ள நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத், இந்தப் புதைகுழிகள் தோண்டப்பட்டு ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். அதே வேளை, அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன், யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நடாத்திய அடையாளப்போராட்டத்தில், உள்ளக தீர்வு முறைகள் ஏற்கப்படாத ஒன்றாகவும், வெளியகத் தீர்வு முறைகள் வலுவிழந்தும் கிடக்கும் இன்றைய சூழலில், பிரித்தானியா தானே தொடக்கி வைத்த ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிலும் தவிசாளர் தியாகராசா நிரோஜன், “இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை; இதற்கு சிறிலங்கா அரசே காரணம். ஆதலால், சிறிலங்கா அரசின் உள்நாட்டு விசாரணைகளில் நாம் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைகளுக்கு அனைத்துலக நீதியே தீர்வைப் பெற்றுத் தரும் என, அறுபதினாயிரம் மக்களின் ஆணையைப் பெற்ற இச்சபை தீர்மானிக்கிறது” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையிலும் உறுப்பினர் துரைசிங்கம் மதன், தனிநபர் பிரேரணையாக, செம்மணி புதைகுழிகள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை மாநகரசபை கோருகிறது எனக் கொண்டு வந்த பிரேரணைக்கு, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும், சபையில் இருந்த அனைவரும் ஆதரவு அளித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.
அதே வேளை, தையிட்டியில் மற்றொரு கட்டிடம் கட்டவும் விகாராதிபதி முயன்றமைக்கு உடனடியாகவே, வலிவடக்கு பிரதேச சபை விளக்கம் கோரியமையும், தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனும், சபை உறுப்பினர்களும் நேரில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்குச் சென்று நிலம் வெட்டப்பட்டிருப்பதைப் பார்வையிட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரமும், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் நேரடியாகச் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர். அதே வேளை, வலிவடக்கு பிரதேச சபையின் சார்பில், சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக்கு எதிராக, அரச அதிபர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை வழக்கறிஞராகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இவ்விடயத்தில் விகாரை தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரனால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஈழத்தமிழர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால், பொதுவிடயங்களில் ஒருமைப்பாட்டுடன் செயற்படத் தொடங்கியுள்ளமை ஆரோக்கியமானதாக உள்ளது. இந்நேரத்தில், சிறிலங்காவின் ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மகாசங்கத்தினரைச் சந்தித்து, அவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை அரசு எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின் வாங்காமல் அரசு செயற்படுத்துவதாகவும், புத்தசாசன செயற்பாட்டுக்கான ஆணையகத்தை அமைக்க ஆணைவழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளமை, இவ்வரசாங்கமும் பௌத்த சிங்களப் பேரினவாத அரசியல் கொள்கையை மேலும் வளர்க்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்நிலையில், ஈழத்தமிழர் தாயகத்தில் வேகம் பெற்று வரும் நீதிக்கான குரல், ஈழத்தமிழரின் இறைமையை உலகம் ஏற்பதன் வழியாகவே நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை உணர்ந்து, அனைத்துலகிலும் உள்ள தமிழர்களும் ஒருமைப்பாட்டுடன் பொதுவேலைத்திட்டங்களை அதற்கேற்ப உருவாக்கிச் செயற்பட வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்




