யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் இன்று (17) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான, துரைசிங்கம் மதன், இதற்கான பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.
இதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியதுடன், தேசிய மக்கள் சக்தியின் 11 உறுப்பினர்கள் உள்ளிட்ட 34 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில், செம்மணி படுகொலைக்கு கண்டனமும், சர்வதேச நீதியான விசாரணையையும் கோரிய தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, செம்மணி மனித புதைகுழிக்கு நீதிக்கோரி தலைநகர் கொழும்பில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முயற்சித்தனர்.
அதற்கமைய, கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக செல்வதற்கு அவர்கள் முயற்சித்த போது, பொலிஸார் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐந்து பேர் மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.