மலையக மக்களின் வாழ்வியலுடன் இணைந்த கூத்துகள் –  மருதன் ராம்

மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற பெயரில் ஆரம்பித்த இந்தப் பயணம் ‘மலையகத் தமிழர்’ எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன் னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் அந்த மக்களின் வாழ்வியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான மாற்றங்கள் மிக எளிதில் கிடைத்தவையல்ல. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. அவ்வாறான மாற்றங்கள் அந்த மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தோட்ட மலையகத் தமிழர்கள், தனித்துவமான வரலாற்றையும், ஆழ்ந்த பண்பாட்டு மரபுகளையும் கொண்டவர்கள் என்ற வரலாறுகள் உள்ளன.
தேயிலைத் தோட்டங்களுடன் பிணைந்து ள்ள மலையக மக்களின் வாழ்க்கை, கலை வடிவங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவர்களது உழைப்பும், போராட்டங்களும், வாழ்வியலும் தனித்துவமான கலை வெளிப்பாடுகளைச் செதுக்கியுள்ளன. இவை வெறும் பொழுது போக்கு அம்சங்களாக இல்லாமல், அவர்களின் சமூக, சமய, உளவியல் தேவைகளுக்கான காலத்தின் சாட்சியாகவும் திகழ்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து பெருந்தோட்ட மக்கள் அழைத்து வரப்பட்டனர்.  அவர்களது கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்ததோடு தங்களுக்கான பாடசாலைகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டனர். எனவே, அந்த மக்களுக்காக கூத்துப் பாடசாலைகள் இயங்கின. அங்கு அந்த மக்களுக்கான கூத்துகள் பயிற்றப்பட்டன.
மலையக மக்களின் கலை வெளிப்பாடுகள், அவர்களின் சமய நம்பிக்கைகளுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளன. கிராமிய தெய்வ வழிபாடுகள், பல்வேறு சடங்குகள், கலை நிகழ்வுகள் சங்கமிக்கும் களங்களாக கூத்துகள் அமைகின்றன. இசை, நடனம், மற்றும் கதைகூறல் ஆகியவை இந்த வழிபாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த கலை வடிவங்கள், மலையக மக்களின் அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.
மலையகத் தமிழ் மக்களின் கலை வெளிப்பாடுகளில், கூத்துக் கலைகள் தனித்துவ மானதொரு இடத்தைப் பெறுகின்றன. மலைய கக் கூத்துகள் பெரும்பாலும் நாட்டுப்புற மரபுகளுடன் பின்னிப்பிணைந்தவை. இவை எழுதப்பட்ட வடிவங்களை விட, வாய்மொழி மரபாகவும், குருகுல வழியிலும் பேணப்பட்டு வருகின்றன. தோட்டப்புறங்களில் வாழும் மக்கள் மத்தியில், குறிப்பாக இரவு நேரங்களில், கடின உழைப்புக்குப் பின்னர் நிகழ்த்தப்படும் இக்கூத்துக்கள், சோர்வைப் போக்கி, ஒருவித மன அமைதியை வழங்கும் சடங்குப்பூர்வமான நிகழ்வுகளாகும். இவை புராண இதிகாசக் கதைகள், மற்றும் சில சமயங்களில் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. இசை, நடனம், ஒப்பனை, வசனம் மற்றும் பாடல்கள் என்பன இந்தக் கூத்துகளின் ஒருங்கிணைந்த கூறுகளாகும்.
மலையகத்தில் நிகழ்த்தப்படும் கூத்துகளில் காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் போன்ற கூத்துகள் முக்கியமானவை யாகும். இரவு தொடங்கிவிட்டால் தொழிலாளர் வாழும் லயன் குடியிருப்புகளில் உள்ள ஏதாவது ஒரு அறையில் ஒருவர் மகாபாரதம், நல்ல தங்காள் கதையை ராகத்துடன் வாசிக்க மற்றவர்கள் சூழ்ந்திருந்து இரசிக்கும் வழக்கம் கடந்த காலங்களில் காணப்பட்டன.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காணப் பட்ட அடக்கு முறைகளுடன் உழைப்புக்கேற்ற ஊதியமின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்வையும் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அளித்தவை இந்த கலைகளாகும். தொழிலாளர் கள் தம் முன்னோரிடமிருந்து பெற்றுக்கொண்ட விலைமதிக்க முடியாத பெரும் சொத்து இவையாகும்.
அண்மைய போக்குகள் பல வருடகால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் கூத்துகள் இன்றும் அந்த மக்களின் வாழ்வியலுடன் நிலைத்து நிற்கின்றது. இந்த கூத்துகளுக்குள் நவீன தொழில்நுட்பங்களோ ஏனைய கலையம்சங்களோ ஊடுருவ முடியாதிருப்பதுவும், மலையக பெருந்தோட்டத்துறை சமூக கட்டமைப்புமே இதற்கு காரணமாகும். இருந்தும் அண்மைக்கால போக்குகள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றன.
தற்போது ஊர் மக்கள் ஒன்று கூடி இவ்வாறான கூத்துகளை உரிய முறையில் நடத்தி முடிப்பதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இதற்கு பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
நகரமயம், உலகமயம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களாலும் மக்களின் பாதையும் மாற்ற மடைந்து வருகிறது. இவ்வாறான நிலை, சமூக பண்பாட்டு வேர்களில் பாதிப்பை ஏற் படுத்தி வருகின்றன. இவற்றுக்கு புறம்பாக சமூக சீரழிவுகள், சினிமா, தொலைக்காட்சி மோகம், இளைஞர்களின் ஆர்வமின்மை போன்ற பல காரணிகளும் கூத்துகள் போன்ற கலையம்சங்கள் அருகி வருவதற்கு ஏதுவாக அமைகின்றன. அத்துடன் அந்த மக்களின் வாழ்க்கைச் சுமைகளும் பொருளாதார பின்னடைவுகளும் தற்போது கூத்துகளில் செல்வாக்கு செலுத்துவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக ஆரம்ப காலங்களில் கூத்து பாடசாலைகளில் கூத்துகள் பயிற்றப்பட்ட போதிலும் தற்போது கூத்துகளை பயிற்றுவிப் பதற்கென ஏதேனும் நிறுவனங்கள் இருப்பதாக தெரியவில்லை. இருந்தும் கூட பல தலை முறைகள் கடந்தும் சில மாற்றங்களுடன் இக் கூத்துகள் இன்றும் இடம்பெறுகின்றன என்பது மிக வியப்பிற்குரியதே. உண்மையில் மலையக சமூகத்தில் ஒவ்வொரு பிரஜையும் இவைபோன்ற கலையம்சங்களை உள்வாங்கி இருக்கின்றனர். எதிர்கால மலையக சமூக உருவாக்கத்திற்கும் காமன்கூத்து முதலான கூத்துகள் ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்பது திண்ணம். இருப்பினும் அதற்கு கூத்துகளை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதனை விரிவான ஆய்வுகளுக்கும் ஆழமான கருத்தாடல்களுக்கும் வாதபிரதிவாதங்களுக்கும் உட்படுத்துவதற்கு இடம்கொடுப்பதாக அமைய வேண்டும்.
காலத்தின் தேவைதற்போதைய நவீன மயமாக்கலுடன் கைவிடப் படும் நிலையினை எட்டியுள்ள காமன்கூத்து உள்ளிட்ட கலையம்சங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு பேணி பாதுகாக்கப்படுவது காலத்தின் தேவையாகும். அவ்வாறான கூத்துகளை முழுமையாக தொகுத்து அவற்றுக்கு எழுத்துரு வாக்கம் கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். பிரதேச பாகுபாடின்றி கல்வி என்ற அடிப்படைகளில் மலையகத்திற்கான கல்விக் கூடங்களில் இதனை ஒரு கற்கை நெறியாக அறிமுகப்படுத்துதல் மற்றும் மாணவர்களுக்கு கட்டாய பாடநெறியாக மாற்றுதல் போன்ற செயற்பாடுகள் இவ்வாறான கூத்துகளை பாதுகாப்பதற்கு வழிவகுக்கும். இன்றும் மலையக பாடசாலைகளிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கூத்து நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இவ் வாறான நிகழ்வுகள் வரவேற்கத்தக்கதே. அத்துடன் பாடசாலைகளில் நாட்டார் கூத்துகள் என்ற பாட விடயதானமும் உள்ளது. இருப்பினும் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. மறுபுறம் வெறுமனே போட்டி நிகழ்ச்சியாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் கூத்துகளை பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் கூத்துகளை மாற்றி உயிரோட்டமுள்ள உளவியல் உணர்வாகவும் மலையக மக்களின் அடித்
தளத்திற்கான ஆணிவேர் என்ற மனநிலை யினையும் தோற்றுவிக்க வேண்டும். இத்தகைய கூத்துகளில் புதைந்திருக்கும் பாரம்பரியமான கல்வி முறையினை அடையாளம் கண்டு அதுவே எமது பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படை என்ற உணர்வினை அடுத்த சந்ததி யினருக்கு கடத்த வேண்டியது இன்றியமையாத தேவையாகும்.