இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு ஓமானுடன் ஒப்பந்தம்

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது.

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூய்தாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளித்தல் என்பவற்றுடன் தொடர்புடைய நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கின்றது.

லக்ஷம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற எக்மன்ட் குழுமத்தின் 31ஆவது முழுநிறைவுக் கூட்டத்தின் போது, 2025 ஜூலை 09ஆம் திகதியன்று இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் சுபாணி கீர்த்திரட்ண, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்தின் நிறைவேற்றுத் தலைவர் கேணல் அப்துல் ரஹ்மான் அமுர் அல்-கியூமி ஆகியோர் உரிய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், உளவறிதல் நோக்கங்களுக்காக தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ளும் பொருட்டு, தற்போது இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவானது 46 வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.

நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் சுபாணி கீர்த்திரட்ண (வலம்;) மற்றும் ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்தின் நிறைவேற்றுத் தலைவர் கேணல் அப்துல் ரஹ்மான் அமுர் அல்-கியூமி (இடம்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர்.