செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம்  காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர்   இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் இரண் டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் நாள் அகழ்வுப் பணியின் போது ஒரு குழந்தையின் அல்லது சிறுவரின்  மண்டையோடு உள்ளிட்ட சிதைவடைந்த எலும்பு கூட்டுத் தொகுதியோடு இன்னும் இருவரது எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாக மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பமாகி முதல் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவருடையது என சந்தேகிக்கப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ஏனைய இரண்டும் அடுத்து நாட்க ளில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன.
இதேவேளை இவ்வாறு இரண்டாம் கட்ட அகழ்வின்போது முதல் நாளில் கண்டு பிடிக்கப்பட்ட சிறுவரின் எலும்புத் தொகுதி தொடர்பிலும் இங்கு தொடர்ந்தும் வெளிவரும் உறவுகளின் எலும்புக்கூடுகள் தொடர்பிலும், ஆடைகள்,பாடசாலைப் புத்தகப் பை. காலணி,வளையல்கள்,பொம்மைகள் என்பன தொடர்பிலும் தமிழர்கள் மத்தியில் பெரும் கவலையும்,சோகமும் ஏற்பட்டிருந்தது.  இந்நிலை யில் இவ்விடயம் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும்  மனிதாபிமானம் கொண்டவர்களினதும் பார்வையினை யும் அங்கு திருப்பியதோடு, தொடர்ந்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு ஊகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் கவ னத்தைத் திருப்பி இவ்விவகாரம் பெருமளவில் பேசுபொருளாக மாறியது.
இந்த அகழ்வுப் பணிகளானது யாழ் நீதி மன்றத்தின் BR 433 PC 2025 எனும் வழக்கிற்கு அமைவாக கௌரவ.நீதிபதி திரு.ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் கட்டளைக்கு அமைவாக அவரது மேற்பார்வையுடன் தொல்லியல் துறை பேராசிரி யர் திரு.ராஜ் சோமதேவா அவர்களுடைய தலைமையில் அவர்களின் குழுவினர், தொல்லியல்துறை மாணவர்கள், மற்றும் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகள், சட்டத்தரணிகள் போலீசார், யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் சோகோ (Sogo) போலீசார் (seen of crime officers ) யாழ் குற்றத் தடுப்பு பொலீஸ் பிரிவினர் என பலரது பிரசன்னத்துடனும் கண்காணிப்புடனும் இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன.
இந்த அகழ்வுப் பணிகள் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர்கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இரு பிரிவுகளாக Site 01 Site 02 என வகைப்படுத்தப்பட்டு இந்த அகழ்வு பணிகள் நடந்திருந்தது.
மனிதப் பேரவலத்தின் அடையாளமாகக் காணப்படுகின்ற செம்மணி சிந்துபாத்தி மயான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது தொடர்ந்தும் பல உறவுகளுடைய எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன, அவற்றில் பல குழந்தைகள், சிறுவர்களுடையதும்,  தாயும் பிள்ளையுமாகவும், குடும்பமாகவும் ஈவு இரக்கமற்றுக் கொன்று கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் பலத்த சந்தேகத்தின் வெளிப்பாடாகவே  பலரது எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அங்கே கண் டெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
அந்த இடத்தில் இடம்பெறுகின்ற அகழ்வு பணிகளின் அடிப்படையில் பார்க்கிறபோது இங்கு மீட்கப்படுகின்ற இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உரிய முறைப்படி அடக்கம் செய் யப்படாதது போன்றும் அவசர அவசரமாகப்  புதைக்கப்பட்டது போன்றுமே காணப்படுகிறது, இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் சுமார்  ஒரு அடி அல்லது ஒன்றரை அடி அளவு ஆழத்திலே இருந்து தான் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே இவைகளைப்  பார்க்கின்றபோது இங்கு நிச்சயமாக ஒரு மனிதப் பேரவலம் இடம்பெற்றிருக்கிறது எனும் சந்தேகத்தை வலுக் கச் செய்கிறது.தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது கிடைக்கின்ற எமது உறவுகளின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழ்ந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டு அவைகள் நீதிமன்றக் கட்டு காவ லில் வைக்கப்படுவதோடு அங்கு கிடைக்கப் பெறுகின்ற ஏனைய சான்றுப் பொருட்களும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்படுகி றது.
இதேவேளை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த அகழ்வுப் பணிகளின் போது காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் நாளில் மழை குறுக்கிட்டது போன்று ஏற்பட்டு விடலாம் எனும் கணிப்பின் அடிப்படையில் மழை பெய்தால் வெள்ள நீர் தேங்காமல் வழிந்து ஓடும் வகையிலே JCB இயந்திரம் மூலம் கான் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது, அவ்வாறு JCB இயந்திரம் மூலமாக கான் வெட்டுகின்ற போது அகழப்பட்ட பகுதிகளிலும் கூட சில மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதனால் அந்த கான் வெட்டும் பணி நிறுத்தப்பட்டதோடு அந்த இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகளுக்காகக் காத்திருக்கிறது.
26.06.2025 முதல் 10.07.2025 வரையான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான 15 நாட்கள் முடிவில் இதுவரை 65 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப் பட்டிருக்கின்றன, இவைகளில் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர் கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இருந்து 63 முழுமையான மண்டையோடுகள் சகிதமான எலும்பு கூட்டுத் தொகுதிகளும், பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களினால் சற்றலைட் மூலமாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு முழுமையான மண்டையோடு சகிதமான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாகவே இந்த 65 எலும்புக்க்கூட்டுத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகள் மூலமாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறது. அத்து டன் அங்கு பெறப்பட்ட ஏனைய சான்றுப் பொருட்களும் நீதிமன்றக் கட்டுக்காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பேராசிரியர் திரு.ராஜ்  சோமதேவா  அவர்களினால் யாழ் நீதிமன்றில் இந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கௌரவ நீதிமன்றினால் பணிக்கப்பட்டுள் ளது. அதேபோன்று மனித என்பு எச்சம் 25 மற்றும் பாடசாலைப் புத்தகப் பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட வேறு பல சான்றுப் பொருட்களுடனும் எடுக்கப்பட்ட என்புகள்  தொடர்பான மனித  என்பு ஆய்வு தொடர்பிலான அறிக்கைகளையும் சட்ட வைத்தியர் திரு. பிரணவன் செல்லையா அவர்களினால் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யுமா றும் கட்டளை ஒன்று உள்ளது.
இதேவேளை அகழ்வுப் பிரதேசம் இலக்கம் இரண்டில் ஒரு இடத்தில் ஒரு பொலித்தின் பையில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சில என்புக் குவியல்களும் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது.
அதில் சிறிய மற்றும் பெரிய எலும்புகளும் காணப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் தோன்றும் சட்டத்தரணிகளால் நீதவா னின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அந்த என்புகளும் ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அறிக்கைகளும் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கௌரவ நீதவான் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரி திரு செ.பிரணவன் தலைமையில் ஒரு குழு அமைத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கூறப் பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான இரண்டாம் கட்டத்திற்கு மொத் தமாக 45 நாட்கள் தீர்மானிக்கப்பட்டு அந்த தீர் மானத்திற்கு அமைவாக நீதி அமைச்சினால் நிதி தொடர்பான விடயம் பாராளுமன்றத்தில்  அங்கீகரிக்கப்பட்டு   நீதி அமைச்சால் கூறப்பட்ட நிதி முழுவதும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கணக்காய்வுப் பகுதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45 நாளில் முதல் கட்டமாக 15 நாட்கள் அகழ்வுப் பணிகள் காலை 07.30 முதல் இரவு சுமார் பத்து மணி வரையும் நீடிக்கும் வகையிலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது.
இறுதி நாளில் (10.07.2025) பேராசிரியர் ராஜ் சோ மதேவா மற்றும் அவரது குழுவினர் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகளும் தென்னிலங்கையைச் சேர்ந்த மேலும் ஆறு சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்லியல் துறை மாணவர்கள் 14 பேர் யாழ் வைத்திய பீட மாணவர்கள் மற்றும் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று  பணியாளர்களும்,நீதிபதி,  சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள், காவல் துறையினர் பணியாளர்கள் அதிகாரிகள் தொல்லியல் துறையினர் பல்கலைக் கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெற்றிருந்தது.
இப்பணியில் ஈடுபட்ட இவர்களுக்கான ஓய்வும் தேவை என்ற அடிப்படையில் பத்தாம் திகதி (10.07.2025) முதல் 10 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டு எதிர் வருகின்ற 21 ஆம் திகதி (21.07.2025) முதல் மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பமாகும் என்பதோடு அதுவரையும் இந்த இடம் வழமை போன்று பாதுகாக்கப்பட்ட இடமாகப் பாதுகாக்கப்படுவதோடு ஏற்கனவே அங்கே பொருத்தப்பட்டிருக்கின்ற இரண்டு சிசிடிவி கேமராக்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பு பணிகள் இடம்பெறுவதோடு மீண்டும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது.