தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்க முயற்சி: தமிழரசுக் கட்சி சாடல்

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

மலையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த  இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கை விடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல.  தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா கூட போதாது.  நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.