இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டை இலங்கை கடற்படை நிராகரிப்பு

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த 7 பேரும், இலங்கையின் கடற்படையினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டனர்.
தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 தமிழக கடற்றொழிலாளர்களும், இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, நேற்று கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் யாழ், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கச்சதீவு பகுதியில் பிரச்சினை இன்றி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள்,இலங்கை அரசுடன் கலந்துரையாட வேண்டும் என இந்திய கடற்றொழிலாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று, இலங்கையினால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று, இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுவதைப் போல, கடல் எல்லையை மீறி அவர்களுடைய படகுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.  அந்தவகையில், இந்திய கடற்றொழிலாளர்களின் குற்றச்சாட்டை முழுமையாக மறுப்பதாகவும், இலங்கை கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.