இலங்கையுடன் கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்கு தயார்: சீனா அறிவிப்பு

இலங்கையுடன் நீடித்த நட்பு மற்றும் நேர்மையான பரஸ்பர உதவியை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்கு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில், இரு தரப்பினரும் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கும் முக்கியமான கட்டுமான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் ஒப்புக்கொண்டனர்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பெரிய திட்டங்கள் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என வாங் யி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பசுமை வலுசக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், நவீன விவசாயம் மற்றும் கடல்சார் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். சீன-இலங்கை கடல்சார் ஒத்துழைப்பானது, பரஸ்பரம் நன்மை பயக்கும் எனவும் அது மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொண்டதல்ல எனவும் சுட்டிக்காட்டிய அவர், மூன்றாம் தரப்பு அதில் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சந்திப்பில் கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை சீனாவுடன் உள்ள உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் ஒரே சீனா கொள்கையை உறுதியாக கடைப்பிடிக்கிறது என்றும் கூறினார்.