கருணாவுடன் தொடர்புடைய இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்  யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை  வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இன்று (06) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர். குறித்த கைது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தனும் தனது முகப்புத்தகத்தின் ஊடாக உறுதிப்படுத்தி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த தகவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் உள்ள வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி   புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதானது  இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  இளைஞர் யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தி பொலிசார் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் மனித கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர். அத்துடன் இனிய பாரதிக்கு மேலதிகமாக மற்றும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.