நிதியியல் அறிவு செயற்திட்டத்தொகுப்பு வெளியீடு – இலங்கை மத்திய வங்கி

நிதியியல் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நிர்வாகம் என்பன தொடர்பில் பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் நாட்டின் முதலாவது தேசிய நிதியியல் அறிவு முறைமை உள்ளிட்ட நிதியியல் அறிவு செயற்திட்டத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் களனி பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைந்து மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தொகுப்பின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு வியாழக்கிழமை (3) மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் தேசிய நிதியியல் அறிவு முறைமை உள்ளடங்கலாக நாட்டின் முதலாவது நிதியியல் அறிவு செயற்திட்டத்தை வெளியிட்டு உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இச்செயற்திட்டத்தொகுப்பின் ஊடாக சகலரும் நிதியியல் தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும், அத்தகவல்கள் தனிநபர் ஒருவர் அவரது நிதியை உரியவாறு முகாமை செய்வதற்கும், நிதிசார் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கும், அவரது பொருளாதார நலனை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேபோன்று ‘இதனூடாக தனிநபர்கள் சரியான புரிதலுடன் நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், தம்மை நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்வதற்கும் ஏதுவான வகையில் நிதியியல் கட்டமைப்பு நிலைமாற்றம் இடம்பெறும்’ எனச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரினதும் பங்களிப்பு என்பது மிக அவசியமானது எனவும், வறுமையை ஒழிப்பதில் அது நேர்மறைத்தாக்கத்தை செலுத்தும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 33.4 சதவீதமானோர் கடனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பலர் உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு கடன் நிதியிலேயே தங்கியிருப்பதாகவும் கவலை வெளியிட்டார்.

அத்தோடு நிதியியல் விடயங்களின் போதிய அறிவு அல்லது தெளிவின்மை இதற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதன் விளைவாக பலர் தவறான நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதியியல் அறிவு தொடர்பான இச்செயற்திட்டத்தொகுப்பு பெரிதும் பயனுடையதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.