வவுனியா – ஓமந்தை காவல் நிலையத்துக்கு அருகில், தனிநபர் ஒருவரின் காணியை, காவல்துறை கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது காவல்துறையினர் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவரிடம் அவர் இந்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பினார்.
‘ஏ9 வீதியில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த காணி அமைந்துள்ளது’.
‘காணிக்கு சொந்தம் கோரும் நபர் குறித்த காணி தனக்குரியது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்’.
இந்தநிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே காவல்துறையினர் காணியை கையகப்படுத்த முயன்றுள்ளனர். தற்போதுள்ள காணியில் இருந்து காவல்துறையினர் இன்னும் வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கினைப்புக்குழுவால் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.