2026 ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல்

2026 ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரித்தல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘செழிப்பான நாடு – அழகான வாழ்வு’ எனும் கொள்கைக்கு அமைய 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரிக்கும் போது கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய அமைச்சுக்களின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்கள் அடையாளங் கண்டுள்ள வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.