ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க் இலங்கை விஜயத்தின் பின்னணியில் சில உள்நோக்கங்கள் இருக்கலாம் என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மரணித்திருக்கும் நிலையில், 15 – 20 வருடங்களுக்கு முன்னர் உள்ள புதைக்குழியொன்றை பார்வையிடுவதற்கு வொல்கர் டர்க் இலங்கைக்கு வருகைத்தந்தமையின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட பகுதியில் பல சிங்களவர்களும், முஸ்லிம்களும் வசித்துவந்த போதிலும், இன்று அவர்கள் இல்லாமல் போயுள்ளனர்.அத்துடன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் மற்றும் ரெலோ போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் பலரையும் விடுதலை புலிகள் கொலை செய்துள்ளனர் என்று சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுடைய நூற்றுக்கணக்கான வதைமுகாம்களும் இருந்துள்ளதுடன், அங்கு பலர் அழைத்துச் செல்லப்படுவதை மக்கள் அவதானித்தமை தொடர்பிலும் எமக்கும் யுத்த காலத்தில் தகவல்கள் கிடைத்திருந்தன.
துணுக்காய், மாங்குளம் பகுதிகளில் விடுதலைப்புலிகள் நடத்திவந்த வதைமுகங்களும் கண்டறியப்பட்டிருந்ததுடன், அங்கு பலர் வதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்;டமை பலரும் அறிந்தவொரு விடயமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தினால், இன்று யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த இராணுவத்தினரை போர்க்குற்றவாளிகளாக காட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதற்கு வழியை வகுக்கும் வகையில் அமைந்துள்ளன என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.