அரச மொழிக் கொள்கைகளை வெளிக்கொணர்வதன் ஊடாக அரச நிறுவனங்களில் மக்களுக்கு சிறந்த மொழி சேவை வழங்க வேண்டும். மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து மொழி ரீதியான கொள்கையினை ஏற்படுத்துவோம். மொழிகள் ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்க 1956 என்ற துரித தொலைபேசி இலக்கத்தையும் 071-19521436 என்ற வாட்சப் இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் தெரிவித்தார்.
அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன் போதே நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் தெரிவிக்கையில்,
எமது தேசிய ஒருமைப்பாட்டு பிரிவானது இவ்வருடமும் அரசகரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்த ஏற்பாடு செய்துள்ளது. எமது அரசின் கீழ் இயங்கும் தேசிய மொழி கல்வி நிறுவனம் மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய அரச கரும மொழிகள் ஆணைக்குழு என்பவற்றின் ஒத்துழைப்போடு கலாசார அலுவல்கள் திணைக்களமும் இந்த திட்டத்திற்கு முக்கியமான பங்காற்றி ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும், எமது அமைச்சு பலதரப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவாறே, தெளிவான மொழிக் கொள்கைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொழிக் கொள்கையை நடைமுறைபடுத்துவதன் முக்கிய பொறுப்புக்களை உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளளோம். அரச நிறுவனங்களில் மொழிக் கொள்கையை பிரயோகிப்பதற்குரிய முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளோம். அரச மொழி கொள்கையை நடைமுறைபடுத்துவதில் வளங்கள் ஒரு பிரச்சினையாகவுள்ளது. மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து மொழி ரீதியான கொள்கையினை ஏற்படுத்துவோம்.
இதற்கான நடைமுறையாக மொழிகள் ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1956 என்ற துரித தொலைபேசி அழைப்பு இலக்கத்தையும் 071-19521436 என்ற வாட்சப் இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளோம்.
செவ்வாய்க்கிழமை (01) அரச மொழி வாரம் ஆரம்பமாகின்ற நிலையில், பாடசாலை தினம், பொது மக்கள் தினம், இளைஞர்கள் தினம் போன்ற முறைகளில் அரச கரும மொழிகள் தினமும் அனுஷ்டிக்கப்டவுள்ளது. அரச மொழிக் கொள்கைகளை வெளிக்கொணர்வதன் ஊடாக அரச நிறுவனங்களில் மக்களுக்கு சிறந்த மொழி சேவை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.