“அணு குண்டுக்கான யுரேனிய செறிவூட்டலை ஈரான் தொடங்கலாம்” – ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பு எச்சரிக்கை

ஈரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டலை தொடங்கும் திறனைக் கொண்டுள்ளது என ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் க்ரோஸி கடந்த வாரம் மூன்று ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதே தவிர முழுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நெருங்கிவிட்டது எனக்கூறி கடந்த ஜூன் 13ம் திகதி அந்நாட்டின் அணுசக்தி மற்றும் இராணுவ நிலைகளை இஸ்ரேல் தாக்கியது. அதன் பின்னர் இந்த மோதலில் இணைந்த அமெரிக்கா ஃபோர்டோ, நதான்ஸ் மற்றும் இஸ்ஃபஷான் ஆகிய ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது குண்டுகளை வீசியது.

இதையடுத்து, ஈரானின் அணுசக்தி மையங்கள் “முழுமையாக அழிக்கப்பட்டன” என்று அமெரிக்க அதிபர் ட் ரம்ப் அறிவித்தார். ஆனால் ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவரின் கருத்து அமெரிக்க அதிபரின்   கூற்றுக்கு முரணாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், “இன்னும் சில மாதங்களில் ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிப்பதை துவங்கக் கூடும்” என க்ரோஸி சனியன்று சிபிஎஸ் நியூஸிடம் (பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளி) தெரிவித்துள்ளார்.