செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளில் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்துபோதும், ஆடைகளோ, வேறு பொருள்களோ இனங்காணப்படவில்லை. நேற்று நடத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த அதேவேளை, என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள் நீலநிற துணி புத்தகப்பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கங்களில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பையை ஒத்ததாக காணப்பட்டாலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தின் மண் மாதிரியைப் பரிசோதிப்பதற்கு சட்ட மருத்துவ அதிகாரிகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கொழும்பில் இருந்து நேற்று வந்த குழு ஆய்வுக்கான மண் மாதிரிகளைச் சேகரித்தது.
இந்த அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான சோமதேவவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அகழ்வு நடவடிக்கைகளின் போது சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி வருகின்றனர்.