ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்து தங்களுக்கு ‘இடி விழுந்தது போல்’ இருப்பதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கவலை

தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கூறியிருப்பது ‘எமது துன்பத்தைக் கடவுளிடம் முறையிடுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற வேளையில், கோயிலுக்குள் வைத்து இடி விழுந்தது போல’ இருப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அவர் இவ்வாறு கூறினாலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையக்கூடும் என்ற நப்பாசை தம்மத்தியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  வோல்கர் டக்ர், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பிரதம நீதியரசர், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தார்.

திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அங்கும் பலதரப்பட்ட குழுக்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்ட உயர்ஸ்தானிகர், அவரது விஜயத்தின் நிறைவு நாளன்று கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில், சர்வதேசத்தின் ஆதரவுடன் உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர்ஸ்தானிகரின் விஜயம் மற்றும் அவரது வலியுறுத்தல்கள் என்பன தொடர்பில் கருத்துரைத்துள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, தாம் யாழ்ப்பாணத்தில் உயர்ஸ்தானிகரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, தங்களின் கோரிக்கைகளையும் உயர்ஸ்தானிகர் புரிந்துகொண்டிருப்பார் என நம்பியதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் உள்ளகப்பொறிமுறை தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்தைப் பார்க்கும்போது, தமது நம்பிக்கை தவறு என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் வாழாத பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் போக்கு இன்னமும் மோசமானதாக இருக்கின்றது’.

அதனைப் பார்க்கும்போது தமிழர்களின் அடையாளங்கள் மிகவேகமாக அழிக்கப்பட்டுவிடும் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் போராட்டக்குழுவாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான போக்கினை உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் புரிந்துகொள்ளவில்லை போல் தெரிகிறது’ என்றும் லீலாதேவி ஆனந்தநடராஜா குறிப்பிட்டார்.

மேலும் தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என்றும், சர்வதேசப் பொறிமுறையே வேண்டும் என்றும் வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்தவேண்டும் என உயர்ஸ்தானிகர் கூறியிருப்பது ‘எமது துன்பத்தைக் கடவுளிடம் முறையிடுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற வேளையில், கோயிலுக்குள் வைத்து இடி விழுந்தது போல’ இருப்பதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.