நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு, அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மையான நிலைவரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளல், அவர்களது பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்றகரமான வழிமுறைகள் குறித்து ஆராய்தல், அவர்கள் சார்ந்து தற்போது நிலவும் சவால்களுக்கான நிலையானதும் யதார்த்தபூர்வமானதுமான தீர்வுகளை அடையாளங்காணல் என்பனவே இச்சந்திப்பின் பிரதான நோக்கங்களாகும்.
இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயன்முறையை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் பிரதானமாக 4 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1951ஆம் ஆண்டு அகதிகள் பிரகடனத்தையும் 1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதன் கூறுகளையும் ஏற்று அங்கீகரித்தல், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் பரந்துபட்ட கொள்கையை வகுத்தல், அகதிகள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அகதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலக்காகக்கொண்டு செயலாற்றிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் என்பனவே அப்பரிந்துரைகளாகும்.