விசாரணைகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் : ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நேற்றிரவு (25) யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

நேற்றிரவு 7 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு இரவு 8.45 வரையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தற்போது சர்வதேச ரீதியாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அக்கறை குறையுமா? என்ற சந்தேகத்தை தாம் எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனம் குறைவடைந்து விடக் கூடாது என்பதற்காகவே தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் பதிலளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பொறுப்பு கூறல் விடயத்தை மனித உரிமைகள் பேரவைக்கு மேலதிகமாக பாதுகாப்பு சபையிலும் பாரப்படுத்த வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள், மனித புதைகுழி விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் தமிழ் அரசியல் தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் , தம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நேற்றைய தினம் (25) செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு சென்றிருந்தார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
அவரது இந்த விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த காணொளியில் வோல்கர் டர்க், செம்மணிக்கான தமது விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் கவலையும் கடந்த காலமும் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது உறவுகளை இழந்த மக்களையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையும் தான் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதே அந்த மக்களின் கவலையாகவும் உள்ளது.
இது பொறுப்பு கூறல் மற்றும் நீதி என்பவற்றுக்கு ஒரு படி மேலே உள்ள விடயமாகும் என்றும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எக்ஸ் தளத்தில் உயர்ஸ்தனிகரின் செம்மணி விஜயம் தொடர்பில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என்ற விடயம் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவை தொடர்பான விசாரணைகள் பாரபட்சமற்றதாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ற வகையில் முழுமையானதாகவும் இருக்க வேண்டும் என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.