செம்மணி மனித புதை குழி- எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம்: சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான்

செம்மணியில் புதைக்கப்பட்ட கைக்குழந்தைகளிற்கும் தங்கள் உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களிற்கும்  தாய்மார்களிற்கும் நாங்கள் எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம் என சட்டத்தரணி பெனிஸ்லோஸ் துசான் தெரிவித்துள்ளார்

அந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

நீங்கள் நாளாந்தம்  பயணம் செய்யும் வீதியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் 19 உடல்களை கண்டெடுத்துள்ளனர்.

செம்மணியில் தற்போது இதுவே இடம்பெறுகின்றது.

மூன்று குழந்தைகளின் உடல்கள் உட்பட 19 பேரின் உடல்களை மீட்டுள்ளனர், இவர்கள் போராளிகள் அல்ல,வளர்ந்தவர்களும் இல்லை மூன்று கைக்குழந்தைகள்.

எனது ஆதரவை வெளிப்படுத்தும் அதேவேளை மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த பொறிகளில் ஒன்று குறித்து நான் குறிப்பிடப்போகின்றேன்.

இலங்கையில் காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்ற பொறி , இலங்கையை வாட்டும் பொறி,நான் இங்கு ஒரு சட்டத்தரணியாகவோ அல்லது சட்டத்துறை சார்ந்த அதிகாரியாகவோ இங்கு பிரசன்னமாகவில்லை,ஆனால் வடக்குகிழக்கை சேர்ந்த பலரின் கதைகளை சொல்வதற்காக வந்திருக்கின்றேன்.

2011- 2014 அறிக்கைகளில் மிகத் தெளிவாக தெளிவுபடுத்தப்பட்டிருந்ததை போல, இலங்கையில் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன.

இதற்கு மேலாக சில உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவங்கள் – மூதூர் மனிதபிமான பணியாளர்கள் கொலை, திருகோணமலை ஐந்து மாணவர்கள் கொலை, கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை போன்றவற்றிற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான நீதி என்பது வெறும் கனவாக மாத்திரமே காணப்படுகின்றது இவ்வாறான  சூழமைவில், தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல்,பொறுப்புக்கூறல் இன்மை என்பன  இலங்கையில் வழமைக்கு மாறான விடயங்கள் இல்லை மாறாக ஒரு விதிமுறையாக மாறியுள்ளன.

நாங்கள் எங்கள் விருப்பம் காரணமாக இந்த விடயங்களிற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச சமூகத்தை நாடாவில்லை மாறாக வேறுவழியில்லாததால் நாங்கள் சர்வதேச சமூகத்தை நாடுகின்றோம்.

ஒவ்வொரு அரசாங்கமும்; வாக்குறுதிகளை மீறியமை என்ற திட்டமிடப்பட்ட தோல்வியால் இந்த நம்பிக்கையிழப்பு ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியது போல உள்நாட்டு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மையும் இதற்கு ஒரு காரணம் , இந்த நிறுவனங்கள் விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளன,குறைந்த வளங்களை குறைந்த பெறுமானத்தை கொண்டுள்ளன.அந்த நிறுவனங்கள் வெறுமனே கண்துடைப்பிற்காக இயங்குகின்றன.

இலங்கையில் காணப்படும் ஒரு சொல்லாட்சி குறித்து நான் எச்சரிக்க விரும்புகின்றேன் – உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும்.

கடந்த தேர்தல்களின் பின்னரும் புதிய அரசாங்கம் வந்த பின்னரும் இலங்கையை யுத்தத்திற்கு பிந்தைய வெற்றி நாடாக சித்தரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.சர்வதேச சமூகம் புதிய அரசாங்கம் அனைத்து சமூக பிரச்சினைகளிற்கும் தீர்வை காணப்போகின்றது என தெரிவிக்க முயல்கின்றது .

நாங்கள் நேர்மையாக பேசவேண்டும் என்றால் வடக்குகிழக்கில் இன்று காணப்படும்யதார்த்தத்தை பார்க்கும் இந்த மோதலிற்கான அடிப்படை காரணங்கள் தொடர்ந்தும் உயிர்ப்புடன் உள்ளன என்பது நன்கு புலனாகின்றது.

நில ஆக்கிரமிப்புகள் நில அபகரிப்புகள்-  மூன்று மாதத்திற்கு முன்னர் வெளியான  வர்த்தமானி முதல் – தையிட்டி குருந்தூர்மலை மயிலத்தமடு  முதல் மன்னார் வரை நிலங்கள் ஒவ்வொருநாளும் அபகரிக்கப்படுகின்றன.

இராணுவமயப்படுத்தல் அதிகரித்து வரும் ஒரு விவகாரம்.

நாங்கள் மீண்டும் முன்னர் பேசிய செம்மணி விடயம் குறித்து நமது கவனத்தை திருப்பும்போது செம்மணி ஒரு நினைவுச்சின்னமோ அல்லது கட்டிடமோ இல்லை.அது ஒரு தொல்பொருள் தொடர்பான இடமும் இல்லை.

அது அரசாங்கபொறிமுறைகளின் திட்டமிடப்பட்ட திறமையின்மைகள் குறித்து எங்களை கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளும் ஒரு இடம் அது.

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களின் பின்னரும் நாங்கள் கைக்குழந்தைகள் உட்பட பலரின் உடல்களை மீட்டுக்கொண்டிருக்கின்றோம்.

தற்போதுள்ள கேள்வி என்னவென்றால் நாங்கள் உண்மையை தோண்டப்போகின்றோமா அல்லது உள்ளே வைத்து புதைக்கப்போகின்றோமா என்பதே தற்போது எங்கள் முன்னால் உள்ள கேள்வி

ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் அவர்களே இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை சர்வதேச கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறலுடன் புதுப்பிக்குமாறும்,சர்வதேச சமூகம் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற  அழைப்பையும் விடுக்கவேண்டும்.நாங்கள் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.ஆதாரங்கள் வெறும் அறிக்கைகளாகவே அல்லாமல், உண்மையான நீதிக்கு வழிவகுக்கும் வகையில். இது வரும் செப்டெம்பரில் UNHRC தீர்மானங்களுக்கு முன்னேற்பாடாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு சுயாதீனமான பொது வழக்கறிஞர் அலுவலகம் (independent public prosecutor’s office) அமைக்க வேண்டும்—அது அரசியல் அமலாக்கத்திலிருந்து முழுமையாகத் தனித்திருக்க வேண்டும், மேலும் ஐ.நா. ஆதரவுடன் செயல்பட வேண்டும்.

சர்வதேச விசாரணை மற்றும் உள்நாட்டின் அர்த்தபூர்வமான விசாரணை ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பொறிமுறைகளிற்கு ஆதரவளியுங்கள் என இங்குள்ள சர்வதேச பிரதிநிதிகளை கேட்டுக்கொள்கின்றேன்.

இறுதியாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் தெரிவித்ததை மீண்டும் நான் வலியுறுத்துகின்றேன்.

தண்டனையிலிருந்து  விலக்களிக்கப்படுதலின் புதைகுழியின் மீது சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது,நீதியில்லாத அமைதி  என்பது தண்டனையிலிருந்து விலக்களித்தலை  ஒரு கொள்கையாக மாற்றிவிடும்.

அந்த தாய்மார்களிற்கும்  தங்கள் நேசத்திற்குரியவர்களை இன்னமும் தேடிக்கொண்டிருப்பவர்களிற்கும்  செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட கைக்குழந்தைகளிற்கும் நாங்கள் எங்கள் மௌனத்தை விட அதிகமாக கடமைப்பட்டுள்ளோம்.