செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் ‘அணையா தீபம்’ போராட்டம் இன்றைய தினம் இறுதி நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் கடந்த 23ம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்றைய தினம் வடக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்றைய தினம் பேரணி ஒன்று ம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவர் செம்மணிக்கு செல்வாராயின் அவரிடன் கையளிப்பதற்கு கடிதம் ஒன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வோல்கர் டர்க் செம்மணிக்கு விஜயம் செய்யாவிட்டால், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் குறித்த கடிதம் கையளிக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் வலி சுமந்த கதையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தை ஏற்பாடு செய்த தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.