இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

அதனூடாக, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களுடன் தொடர்புடைய கடுமையான அபாயங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து பிரித்தானியா தமது குடிமக்களை எச்சரித்துள்ளது.

நவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இலங்கை விமான நிலையங்கள் ஊடாக பயணிக்கும் போது, போதைப்பொருட்களை வைத்திருந்தால், பயன்படுத்தினால் அல்லது கடத்தினால் பயணிகள் நீண்ட சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகள் குற்றச்சாட்டு இல்லாமல் தனிநபர்களை தடுத்து வைக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, போதைப்பொருள் குற்றங்கள் அல்லது பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்கள், நீண்ட சிறைத் தண்டனைக்கு வழிவகுக்கும் எனவும் இந்த ஆலோசனை குறிப்பிடுகிறது.

தாய்லாந்திலிருந்து இலங்கை சென்ற தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர், பயணப்பையிலிருந்து 46 கிலோகிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் போதைப்பொருள் பற்றி தமக்கு எந்த விபரமும் தெரியாது என மறுத்து போதிலும் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பயண ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.