செம்மணி மனித புதைகுழிக்கு நீதிக் கோரி தொடரும் ‘அணையா தீபம்’ போராட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் ‘அணையா தீபம்’ போராட்டம் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (23) முற்பகல் 10.10 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ‘அணையா தீபம்’ போராட்டம் செம்மணியில் 1996களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் இன்று சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது சட்டதரணி வைஸ்ணவி சண்முகநாதன் செய்தியாளர்களிடம் போராட்டத்தின் நோக்கம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் உயிர்நீத்த உறவுகளுக்காக இதன்போது அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மக்கள் செயல் என்ற அமைப்பினால் முன்னெக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் நாளை மறுதினம் (25) வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, செம்மணி மனிதப்புதைக்குழிக்கு நீதிக்கோரி இடம்பெறும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தீப்பந்தம் ஏந்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.