தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அவசரக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அதனுடன் இணைந்த ஊடக நிறுவனங்களால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகத்திற்காக, 2016ஆம் ஆண்டின் தகவலறியும் உரிமைச் சட்டம் அவசியம் என குறித்த தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் தகவலறியும் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலைவர் ஒருவர் இல்லை எனவும் இது அதன் செயல்பாடுகளைத் தடுக்கிறது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஆணைக்குழுவுக்கு அத்தியாவசிய சட்ட ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதில் அரசாங்கம் தாமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அந்த ஆணைக்குழுவின் திறனைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் பிரகாரம் அதனால் ஒரு சுயாதீன நிதியை இயக்க முடியாது. எனவே, ஒரு புதிய தலைவரை தகவலறியும் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உடனடியாக நியமித்து, அதன் சுதந்திரத்தையும் செயல்திறனையும் மீட்டெடுக்குமாறு ஜனாதிபதியை குறித்த ஊடகக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.