செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள ‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனை தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணம் – செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு அடையாள போராட்டத்தினை இன்றைய தினம் (23) ஏற்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். செம்மணியில் மாத்திரம் அல்ல கடந்த காலத்தில் கொக்குத்தொடுவாயிலும் கூட கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் எந்த வகையான நீதியும் இதுவரைக்கும் கிடைக்கப் பெறவில்லை. இந்த மனித புதைக்குழியை விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அளவு தேவையான தொழில்நுட்ப அறிவு இல்லாததன் காரணத்தினால் இதற்கு சர்வதேச உதவியை இலங்கை அரசாங்கம் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக மனித புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் அதிகளவில் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆடைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை இது ஒரு பாரிய சந்தேகத்தை தரும் ஒரு விடயம்.

இந்த விடயத்தை நேர்மையாக இலங்கை அரசாங்கம் விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.