வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் நியமனம்!

வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில்  வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.

பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.

இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின் சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.