முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் தமிழரசு கட்சி இணைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குற்றஞ்சாட்டு

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்ற தரப்புடன் இலங்கை தமிழரசுக் கட்சி இணைந்து ஆட்சி அமைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால் தான் அவரின் தலைமைப்பதவிக்கு எதிராக அவரது கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பட்டு வருகின்றன’.  ‘தற்போது மட்டும் அல்ல தேர்தலுக்கு முன்பு இருந்தே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டவர்கள் போலிக்கருத்துகளை பரப்பி வந்தனர்’.

‘அதன் மற்றுமொரு அங்கமே பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கட்சியுடன் கூட்டணி என்ற கதையாகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் தங்களுக்கு இரகசிய ஒப்பந்தம் கிடையாது’ என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ராஜபக்சக்களுடன் கரம் கோர்த்து செயற்பட்டிருந்தார். அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இலங்கை தமிழரசுக் கட்சி ஒன்று சேர்ந்துள்ளது.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.