வடக்கு மாகாணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்படும் என பொது வெளியில் அறிவித்த அரசாங்கம், அதனை நீதிமன்றில் கூறுவதற்கு தயங்குவதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதுடன் அந்த மனு நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் மன்னாரில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த எம்.ஏ.சுமந்திரன், அமைச்சரவையின் அனுமதியையும் பெற்றதன் பின்னரே, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதாக அரச தரப்பு சட்டவாதி மன்றுரைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களில் சுமார் 6 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இதற்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பின்னணியில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படும் என பொதுவெளியில் காணி விவகார அமைச்சு அறிவித்த போதிலும் இதுவரையில் அந்த நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அரசாங்கத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதியும் அதனை நீதிமன்றில் கூறுவதற்கு மறுக்கிறார்.
அமைச்சரவையின் அனுமதியினை பெற்றதன் பின்னரே அதனை குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.