கிளீன் சிறிலங்கா மூலம் சூழல் பாதுகாக்கப்பட்டதா ? – கிண்ணியான்

சூழல் என்பது மனிதனை சுற்றியுள்ள அனைத்தும் என்பதை எடுத்துக் காட்டு வதுடன் சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதன தும் கடப்பாடாகும். இதன் ஒரு பகுதியாக சூழல் மாசடைவு என்பது இயற்கை மற்றும் மனித செயல்களால் ஏற்படும் மாசடைவு ஆகும், இது மனிதர்களின் வாழ்க்கை முறையும், உயிரினங்களின் வாழ்வும், பூமியின் நிலத்தன்மையும் மீது தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.  மனிதனது பல நடவடிக்கைகளால் சூழல் மாசடைகிறது.
சூழல் மாசடைவின் முக்கிய தாக்கங்களாக மனித உடல்நலத்தின் மீதான தாக்கங்களும் பங்கு வகிக்கின்றது .இதில் காற்று மாசடைவு காரணமாக  தும்மல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய் போன்ற பல சுவாச நோய்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சூழல் மாசடைவு என்பது பல வழிகளில் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது.
தண்ணீர் மாசடைவு: 
வயிற்றுப்போக்கு, நெருப்பு காய்ச்சல், கொலரா போன்ற நீர் மூலம் பரவும் நோய்களாகும்.
நிலம் மாசடைவு: 
உணவுப் பயிர்கள் மீது பாதிப்பு, விஷச் சேர்க்கைகள் உணவுக்கு ஊடுருவுவதால் உடல்நல பாதிப்பு ஆகும்.
விலங்கு மற்றும் தாவரம் மீது தாக்கம்: 
வனவிலங்குகள் வாழும் சூழல் பாதிக்கப் படுகிறது. இது போன்று கடல் உயிரினங்கள் பிளாஸ்டிக் மற்றும்  கழிவுகளால் பாதிக்கப்படுகின் றன.இவை அனைத்தும் நம்மை மற்றும் எதிர்கால தலைமுறையை பாதுகாக்க முக்கியமான விடயங்களாகும்.
சுற்றாடல் தினமானது ஒவ்வொரு வருட மும் ஜூன் மாதம் 05ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வருடம் மே 30 தொடக்கம் ஜூன் 05 வரை சூழல் தினம் கொண்டாடப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடாக புதியதொரு திட்டமாக கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளின் கீழ் பல சுற்றாடல் நிகழ்வுகள் இடம் பெற்றன.
குறிப்பாக சூழல் தொடர்பில் சற்று பார்க்கின்ற போது குடியிருப்பு பகுதிகள்,வீதிகளில் சேரும் கழிவுகளை உள்ளூராட்சி மன்றங்கள் முறை கேடாக குப்பை தொட்டிகளாக சேமிப்பதால் அப்பகுதிகளினை அண்டிய மக்கள் பல இடர்களை எதிர் நோக்குகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுதல், யானைகளின் படை எடுப்பு போன்றனவும் இடம் பெற்று வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் காணப் படும் கிண்ணியா நகர சபைக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் பகுதி சின்னத்தோட்டத்தில் உள்ளது. இது போன்று திருகோணமலை மாநகர சபைக்கானது கன்னியா பகுதியிலும் தம்பலகாமம் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பை மேடு ஜெயபுரவில் உள்ளது. இதனால் பல பகுதிகளில் இருந்து வரும்  யானைகள் இந்த குப்பைகளை உண்பதற்கு வருகின்றன.  அதே நேரம்   துர்நாற்றமும் வீசுகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அண்டிய மக்கள் பல போராட் டங்களை குப்பை மேட்டுக்கு எதிராக நடத்தியுள் ளனர். இப் பகுதி ஊடாக பயணிக்க முடியாது உள்ளதுடன் பாலம் போட்டாறு பகுதியில் வாழும் மக்கள் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டி யுள்ளதாகவும் யானை தாக்குதல்களுக்கும் இலக் காகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
எங்களது ஊரில் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இதற்கான காரணம் குப்பை மேடுதான்.
குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரி பல ஆர்ப்பாட்டங்கள் செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  பேருந்து ஏறுவதற்காக காத்திருக்கும் போது இந்த குப் பைகளின் துர்நாற்றம் தாங்க முடியாது. அது மட்டுமன்றி இங்கு பாதுகாப்பான யானை வேலி இல்லை. இந்த யானை பிரச்சினையால் ஊருக்குள் நிம்மதியாக வாழ முடியாது. மாலை 5 மணிக்கே யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசங்களை மேற்கொள்வதுடன் எங்களது நெற்செய்கை விவசாயம் தோட்டச் செய்கைகளை அழித்து விடு கின்றன. கச்சான் போன்ற பயிர்களையும் துவம்சம் செய்து விட்டு செல்கின்றன. இங்கு குப்பை கொட்டுவதனால் அங்குள்ள விலங்குகள் அதனை சாப்பிட்டு விட்டு ஊருக்குள் வருவதனாலும் பல தொற்று நோய்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறானவற்றில் இருந்து பாதுகாக்க குப்பை மேட்டை அகற்றி பாதுகாப்பான யானை கள் வேலியினை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என பாலம்போட்டாறு பத்தினிபுர கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் ஜீ.விதுர்சியா (வயது_27) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறான நிலையில் சூழல் மாசடைவு என்பது பல உயிர் ஆபத்துக்கள் உள்ளிட்ட பல நோய்களையும் ஏற்படுத்துகின்றதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக 2019ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான கடந்த ஆறு ஆண்டுகளில், யானை – மனித மோதல்களால் இலங்கையில் 2,425 காட்டு யானைகளும் 961 பொதுமக்களும் உயிரிழந்துள்ள தாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கைகளில் அவதானிக்க முடிகின்றது.
இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் மாத்திரம் 43 காட்டுயானைகளும், மூன்று மனிதர் கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
கடந்த காலத்தில் தொடர்ச்சியாக ஏற் பட்டுவரும் இந்த காட்டு யானைகள்- மனித மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் FactSeeker இனால் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி எழுத்து மூலம் தகவல் கோரப்பட்டது.
இந்த காலகட்டத்தில் அதிகமான மனித உயிரிழப்புகள் அநுராதபுரம் மாவட்டத்தில் பதிவா கியுள்ளன.
இதன்போது 185 பேர் அநுராதபுரம் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப் புத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டுயானைகளின் உயிரிழப்புகள் 2023ஆம் ஆண்டு பதிவாகியுள்ளன. அவ்வாண்டு 488 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வனப்பகுதி அடிப்படையில் கணக் கெடுப்பை முன்னெடுத்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டு யானை உயிரிழப்புகள் பொலன்னறுவை வனப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.
அப்பகுதிகளில் 487 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள காட்டு யானைகள் முக்கியமாக, துப்பாக்கிச் சூடு, மின்சாரக் கம்பி தாக்குதல் மற்றும் பட்டாஸ் மூலமான தாக்குதல் போன்ற காரணங்களால் நடந்துள்ளன.
2019 முதல் 2024 வரையிலான ஆறு ஆண்டு களில், துப்பாக்கிச் சூட்டால் 409 யானைகளும், பட்டாஸ் தாக்குதல் மூலம் 356 யானைகளும், மின்சார கம்பி தாக்குதலில் 316 யானைகளும் உயிரிழந்துள்ளன.
மேலும், அதிகமான சொத்து சேதங்களும் பொலன்னறுவை மாவட்டத்திலேயே இடம் பெற்றுள்ளன.
2024ஆம் ஆண்டில் மாத்திரம் மனித-யானை மோதலால் 3,756 பேர் சொத்து சேதங்களை சந்தித்துள்ளனர். இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவாகியுள்ள மிக அதிகமான சொத்து சேதங் களாகும். இயற்கையின் அழகை மனிதன் ரசிப்பதற்கு மாத்திரமல்ல உயிர் வாழ்வதற்கும் தான் என்ற நிலையில்  எனவே சூழல் பாதுக்காக்கப்பட வேண்டும். சுற்றாடல் துறை அமைச்சு உருவாக் கப்பட்டாலும் சூழல் மாசடைதலை தடுக்க பல திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தோல்வி கண்டுள்ளது. கொழும்பு நகர் அதிக சனத்தொகை கொண்டதாக காணப்பட்டாலும் அங்கு வீதிகளில் பல துப்புரவு தொழிலாளர்கள் சேவையில் ஈடுபட்டாலும் பல இடங்கள் பல வழிகளில் மாசடைகின்றது. புகை மூலம்,ஒலி ஒளி மூலம், தூசி துணிக்கைகள், நீர் உள்ளிட்ட பல வழி வகைகளில் மாசடைதல் ஏற்படுகிறது. ஆனாலும் தற்போதைய அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முறையான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளதாகவும் இது கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் என்பதாக அவர்கள்  கூறினாலும் முறையாக சூழல் மாசடைதலை தடுக்க முடியவில்லை .
எனவே தான் சூழலை சுத்தமாக்க ஒவ்வொருவரது வீட்டில் இருந்து உருவாக்க நாம் அனைவரும் வழியமைப்போமாக.