முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அபகரிப்பு முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள்.
இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் இன்று (17) சென்ற நிலையில் மக்கள் மற்றும் காணியின் உரிமையாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்தமையினால் காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள், அரச நிலஅளவையாளர், சிலாவத்தை கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்த போது காணியின் உரிமையாளர்கள் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதனால் காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிலாவத்தை கிராமத்தில் கடற்படை முகாம் 2009 ஆண்டு இறுதி போருக்கு பின்னர் அமைக்கப்பட்டது.

எனினும் இந்த காணியானது நான்கு மக்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் என மக்கள் தெரிவித்துள்ளார்கள். 1981 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியில் தாங்கள் வசித்து வந்துள்ளதாகவும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணிக்கான ஆவணங்கள் அனைத்தும் அழிந்துள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பல சந்தர்ப்பங்களில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது குறித்த காணியை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சிலாவத்தை பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.