யாழ்ப்பாணம் – தீவகப் பகுதியிலுள்ள பிரதேச சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சி முயற்சி

யாழ்ப்பாணம் – தீவகப் பகுதியிலுள்ள நெடுந்தீவு, வேலனை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதால், தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவகத்தின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரனுடனான சந்திப்பின்போது அவர்கள் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர். ஈழ விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்காகவும், அந்த போராட்டத்திற்கு எதிராகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வலிந்து செயற்பட்டுள்ளனர்.

தீவக மக்கள் மீது அவர்கள் மேற்கொண்ட அராஜகங்களை மறந்து, தவிசாளர், உப தவிசாளர் பதவிகளுக்காக அவர்களுடன் இணைய முற்பட்டால், மக்களுக்கும் தமக்குமான இடைவெளிகள் அதிகரிக்கும் எனக் குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அதனைத் தவிர்த்து, சபைகளில் தனித்து ஆட்சியமைப்பது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் தீவகப்பகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தம்முடன் கலந்துரையாடியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியைக் கடந்த வாரம் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.