மன்னாரில் இணைந்து சபை அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி முன்வர வேண்டும் : சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயல்பட இலங்கை தமிழரசுக் கட்சியுடன்  ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன்  சார்ந்து செயல்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன் வருவார்கள் என நம்புவதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி ஆணையாளரினால் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் 5 சபைகளுக்கான தவிசாளர்களை தெரிவு செய்கின்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் நோக்கம் தமிழ் கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆகும். அதன் மூலம் சபைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்கள் செயல்பட்டு இருந்தோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் போது கூட மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக வீட்டுச் சின்னத்தில் தமிழரசுக் கட்சியும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் போட்டியிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் ஒரு இனக்கப்பாடு ஏற்பட்டு இருந்தது. ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்கள் எடுக்கின்ற கட்சிக்கு மற்றைய கட்சி ஆதரவு வழங்குவதாக இனக்கப்பாடு ஏற்பட்டது.
அதனடிப்படையில் மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை தமிழரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் மாந்தை மேற் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவில் முதல் 2 வருடம் தமிழரசுக் கட்சிக்கும் அடுத்த 2 வருடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் வழங்குவது என இரு தரப்பினருக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
மாந்தை மேற்கில் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்ற காரணத்தினால் எங்களுக்கு முதல் 2 வருடங்களை வழங்க கோரிக்கை விடுத்தோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் யோசித்து விட்டு கூறுவதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை என்று வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

குறித்த மூன்று சபைகளுக்குமான தவிசாளரை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம். நானாட்டான் பிரதேச சபை குறித்து கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டின் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ஆசனம் பெற்ற சபைகளில் தமிழ் கட்சிகள் முன் வந்து நிபந்தனையற்ற வகையில் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை முதல் 2 வருடங்கள் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய 2 வருடங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் வழங்க இலங்கை தமிழரசு கட்சி தயாராக இருக்கிறது என்றும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.