வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இணைந்து செயற்பட முக்கிய தமிழ் கட்சிகள் தீர்மானம்!

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சைக் குழுக்கள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளன.

இந்த கூட்டு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் எப்படி செயற்படுவதென இன்று (15) கலந்துரையாடல் நடத்தியது. இதன்மூலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் ஒரு உள்ளூராட்சிசபையில் ஆட்சியமைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

மன்னார், வவுனியாவில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் அண்மையில் ரெலோ தரப்பினர், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், செயலாளரை சந்தித்து பேசியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எப்படி நடந்து கொள்கிறதோ அதேபோலவே வன்னியில் தமிழரசு கட்சி நடந்து கொள்ளும் என அதன் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அப்படி கூறியிருந்தாலும், கள யதார்த்தம் தமிழரசு கட்சிக்கு பாதகமாக இருந்தது.
தமிழரசு கட்சி- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணையாவிட்டால் வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இழக்கும்.

இலங்கை தமிழரசு கட்சி வவுனியா, முல்லைத்தீவில் அனேகமான சபைகளை இழக்கும்.
இந்த கள யதார்த்தத்தை புரிந்துகொண்ட வன்னி மாவட்ட தமிழரசு பிரமுகர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவில் மாற்றமில்லையென குறிப்பிட்டு வந்தனர்.
முன்னதாக, வவுனியா மாவட்ட உள்ளூராட்சிசபைகள் தொடர்பாக இரு தரப்பும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

அந்த உடன்படிக்கையின்படியே செயற்படுவோம், வன்னி முடிவில் மாற்றமில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கமும், சக தமிழ் தரப்புக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அந்த கூட்டு உறுதியாகியுள்ளது.